741
பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே

742
மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
ஆசுவரே என்னை அலைவேனை ஆளாயேல்
கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்திடியார்
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே

743
ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியி தல்லஎன்றே
யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே

744
நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
ஊக்கமிலா நெஞ்சத்தின் ஒட்டகலச் செய்வாயேல்
தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே

745
போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
பாகின் தணிச்சுவையிற் பாங்காரும் நின்அருளை
ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே