746
ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
பீழைமனம் நம்மைப் பெறதம் மனங்கொடிய
தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே

747
மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே

748
முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே

749
பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வொர்க்கும்
எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே

750
வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே