751
பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே

752
ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே

753
நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
இணையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே

திருச்சிற்றம்பலம்

 நெஞ்சொடு நேர்தல் 
திருவொற்றியூர்
கலிவிருத்தம்
திருச்சிற்றம்பலம்

754
ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே

755
ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
நீடும் ஒற்றியூர் நிமலன் முவர்கள்
பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
நாடு நாடிடில் நாடு நம்மதே