756
நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால்
அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார்
தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே

757
தம்ப லம்பெறும் தைய லார்கணால்
வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே

758
செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே

759
வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே

760
இல்லை உண்டென எய்தி ஐயுறும்
கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
நல்லை நல்லைநீ நட்பின் மேலையே