761
மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
ஓலை கட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
பாலை சேர்படம் பக்க நாதர்தம்
காலை நாடிநற் கதியின் நிற்பையே

762
நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே

763
போற்றி ஒற்றியூர்ப் புண்ணி யன்திரு
நீற்றி னான்தனை நினைந்து நிற்பையேல்
தோற்ற ரும்பரஞ் சோதி நல்அருள்
ஊற்றெ ழும்கடல் ஒக்க நெஞ்சமே

திருச்சிற்றம்பலம்

 திருப்புகழ் விலாசம் 
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

764
துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
இன்ப மேஇமை யான்மகட் கரசே
திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே

765
கண்ண னோடயன் காண்பரும் சுடரே
கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே