766
விடங்க லந்தருள் மிடறுடை யவனே
வேதன் மால்புகழ் விடையுடை யவனே
கடங்க லந்தமா உரியுடை யவனே
இடங்க லந்தபெண் கூறுடை யவனே
எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே
திடங்க லந்தகூர் மழுவுடை யவனே
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே

767
கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
காமன் வெந்திடக் கண்விழித் தவனே
தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
நாத னேசிவ ஞானிகட் கரசே
செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே

768
ஏல வார்சூழ லாள் இடத் தவனே
என்னை ஆண்டவ னேஎன தரசே
கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
நாடி டாதருள் நற்குணக் குன்றே
சில மேவிய தவத்தினர் போற்றத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே

769
ஆறு யாண்முகத் தமுதெழும் கடலே
அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே

770
மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
நிகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே