771
மாலின் கண்மலர்திருப் பதனே
மயிலின் மேல்வரு மகவுடை யவனே
ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
கடவு ளே நெற்றிக் கண்ணுடை யவனே
சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே

772
நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
குற்ற முங்குண மாக்குறிப் பவனே
தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே

773
அம்ப லத்துள்நின் றாடவல் லானே
ஆள்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
சம்பு ரங்கர சிவசிவ என்போர்
தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
தும்பை வன்னியம் சடைமுடி யவனே
தூய னேபரஞ் சோதியே எங்கள்
செம்பொ னேசெழும் பவளமா மலையே
கழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே

திருச்சிற்றம்பலம்

 தியாக வண்ணப் பதிகம் 
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

774
காரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற
ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல்
நீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான்
பேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே

775
தண்ணார் நீபத் தாரா னொடும்எம் தாயோ டும்தான் அமர்கின்ற
கண்ணார் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
பண்ணார் இன்சொல் பதிகம் கொண்டு படிக்கா சளித்த பரமன்ஓர்
பெண்ணார் பாகன் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே