776
பத்தர்க் கருளும் பாவையொ டும்வேல் பாலனொ டும்தான் அமர்கின்ற
நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கொன் றருளானேல்
சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான்
பித்தப் பெருமான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே

777
மண்ணும் கதிர்வேல் மகனா ரோடும் மலையா ளொடும்தான் வதிகின்ற
துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கொன் றருளானேல்
மின்னும் சூலப் படையான் விடையான் வெள்ளிமலையொன் றதுஉடையான்
பின்னும் சடையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே

778
அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
தணியாக் கோலம் கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
மணிசேர் கண்டன் என்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே

779
சூத மெறிவேல் தோன்ற லொடும்தன் துணைவி யொடும்தான் அமர்கின்ற
காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன்மாற் கிறையானான்
பேதம் இல்லான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே

780
வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளோடும்தான் அமர்கின்ற
மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல்
கற்றைச் சடையான் கண்முன் றுடையான் கரியோன் அயனும் காணாதான்
பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே