786
கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே
காம ஐம்புலக் கள்வரை வீட்டி
வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை
மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே
உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்
குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்
தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

787
சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை
தாயி லார்எனத் தயங்குகின் றாயே
மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா
வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்
உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்
தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

788
விடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ
வெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ
மடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல
வாழ்வு வந்தது வருதிஎன் னுடனே
இடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா
ரியார்கண் டாய்ஒன்றும் எண்ணலை கமலத்
தடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

789
பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
போக்கி நின்றனை போனது போக
வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
திருந்தி நின்றநம் முவர்தம் பதிகச்
செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே


790
நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா
நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ
வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்
கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்
தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே