791
உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

792
மோக மதியால் வெல்லும்ஐம் புலனாம்
முட வேடரை முதலற எறிந்து
வாகை ஈகுவன் வருதியென் னுடனே
வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
பாற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

793
பசிஎ டுக்குமுன் அமுதுசே கரிப்பார்
பாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ
வசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா
மதியில் நெஞ்சமே வருதிஎன் னுடனே
நிசிஎ டுக்கும்நல் சங்கவை ஈன்ற
நித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச்
சசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

திருச்சிற்றம்பலம்

 எழுசீர் தொவேமுதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு எண்சீர்சமுகஆபா
 அருள் நாம விளக்கம்
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

794
வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே

795
தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே