796
மின்னும் நுணண்டைப் பெண்பெரும் பேய்கள்
வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
இன்னும் வீழ்கலை உனக்கொன்ற சொல்வேன்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பொன்உ லாவிய பூஉடை யானும்
புகழ்உ லாவிய பூஉடை யானும்
உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே

797
பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
புலைய மங்கையர் புழுநெறி அளற்றில்
என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே

798
வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
கரைக்கும் தௌ;ளிய அமுதமோ தேனோ
கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே

799
வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய்
மறலி வந்துனை வாஎன அழைக்கில்
ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
போது வைகிய நான்முகன் மகவான்
புணரி வைகிய பூமகள் கொழுநன்
ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே

800
நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
எண்ணும் என்மொழி குருமொழி ஆக
எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளுற
உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே