801
பந்த வண்ணம்஑ம் மடந்தையர் மயக்கால்
பசையில் நெஞ்சரால் பரிவுறுகின்றாய்
எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே

802
மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்
எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
தட்டி லாதநல் தவத்தவர் வானோர்
சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே

803
நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
இலவு காத்தனை என்னைநின் மதியோ
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்தத
பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே

திருச்சிற்றம்பலம்

 சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

804
பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
தொழுது சண்முக சிவசிவ எனநம்
தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதம் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

805
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
ஓது சண்முக சிவசிவ எனவே
உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
ஆது சொல்லுதல் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே