806
ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
குழக வோஎனக் கூவிநம் துயராம்
ஆலம் சொல்லுதம் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

807
மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

808
இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோ ர்
ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
தூய என்றடி தொழுதுநாம் உற்ற
அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

809
கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
பரவு சண்முக சிவசிவ சிவஓம்
பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

810
ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேவி
வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
வரசு யம்புசங் கரசம்பு எனவே
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே