811
ஈர்ந்த நெஞ்சினார் இடந்தனில் இருந்தே
இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

812
கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
எமைப்பு ரந்தசண் முகசிவ சிவவோம்
இறைவ சங்கர அரகர எனவே
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

813
உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
நிறைந்த சண்முக குருநம சிவஓம்
நிமல சிற்பர அரகர எனவே
அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே

திருச்சிற்றம்பலம்

 நமச்சிவாய சங்கீர்த்தன லகரி 
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

814
சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
நமச்சி வாயத்தை நான்மற வேனே

815
அட்ட முர்த்தம தாகிய பொருளை
அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
வேத முலத்தை வித்தக விளைவை
எட்ட ரும்பர மானந்த நிறைவை
எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
நட்டம் ஆடிய நடனநா யகத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே