816
உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே

817
மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
பாலின் உள்இனித் தோங்கிய சவையைப்
பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே

818
உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
கடந்த மேலவர் கலந்திடும் உறவை
எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே

819
திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

820
பெற்ற தாய்தனை மகமறந் தாலம்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே