821
உடைஉ டுத்திட இடைமறந் தாலும்
உலகு ளோர்பசிக் குணமறந் தாலும்
படையெ டுத்தவர் படைமறந் தாலும்
பரவை தான்அலைப் பதுமறந் தாலும்
புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும்
பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும்
நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

822
வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
நன்மை என்பன யாவையும் அளிக்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

823
இன்னும் பற்பல நாளிருந் தாலும்
இக்க ணந்தனி லேஇறந் தாலும்
துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

 திருவருள் வழக்க விளக்கம் 
திருவொற்றியூர்
கட்டளைக் கலித்துறை

திருச்சிற்றம்பலம்

824
தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே

825
வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்ட தீஞ்சுவைத்தாய்
உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே