831
எல்லாம் செயவல்ல சித்தரின் மேவி எழில்மதுரை
வல்லாரின் வல்லவர் என்றறி யாமுடி மன்னன்முன்னே
பல்லா யிரஅண்ட மும்பயம் எய்தப் பராக்கிரமித்துக்
கல்லானை தின்னக் கரும்பளித் தார்எம் கடவுளரே

832
மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே

833
மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் கார்எம் கடவுளரே

திருச்சிற்றம்பலம்

 இரக்கமில்லீர் எம்பிரான் என நாவுக்கரசர் பாடியதாவது 
அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே


 புண்ணிய விளக்கம் 
பொது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

834
பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர்அளிக்கும் சிவாய நம்என் றிடுநீறே

835
கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே