836
வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே

837
கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே

838
வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சமேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே

839
கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே

840
நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம் சிவயா நமஎன் றிடுநீறே