846
வாடக்கற் றாய்இஃ தென்னைநெஞ் சேயிசை வாந்தசிந்து
பாடக்கற் றாய்இலை பொய்வேடம் கட்டிப் படிமிசைக்கூத்
தாடக்கற் றாய்இலை அந்தோ பொருள்உனக் கார்தருவார்
நீடக்கற் றார்புகழ் ஒற்றிஎம் மானை நினைஇனியே

847
சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காய் இலைநல்ல சோமன்இல்லை
பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமன்இல்லை
வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகமது
நாடில்லை நீநெஞ்ச மேஎந்த ஆற்றினில் நண்ணினையே

848
நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும்
பாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ
வாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால்
சேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே

849
பொய்விரிப் பார்க்குப் பொருள்விரிப் பார்நற் பொருட்பயனாம்
மெய்விரிப் பார்க்கிரு கைவிரிப் பார்பெட்டி மேவுபணப்
பைவிரிப் பார்அல்குற் பைவிரிப் பார்க்கவர் பாற்பரவி
மைவிரிப் பாய்மன மேஎன்கொ லோநின் மதியின்மையே

850
வாழைக் கனிஉண மாட்டாது வானின் வளர்ந்துயர்ந்த
தாழைக் கனிஉணத் தாவுகின் றோரில் சயிலம்பெற்ற
மாழைக் கனிதிகழ் வாமத்தெம் மான்தொண்டர் மாட்டகன்றே
ஏழைக் கனிகர் உளத்தினர் பாற்சென்ற தென்னைநெஞ்சே