861
மணித்தலை நாகம் அணையவெங் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கிப்
பிணித்தலைக் கொண்டு வருந்திநின் றுழலும் பேதையேற் குன்னருள் உளதோ
கணித்தலை அறியாப் பேர்ஒளிக் குன்றே கண்கள்முன் றுடையஎன் கண்ணே
அணித்தலை அடியர்க் கருள்திரு வொற்றி அப்பனே செப்பரும் பொருளே

862
ஒப்பிலாய்உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
வெப்பில்ஆழ்ந் தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத் துழன்ற
இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின்அருள் கிடைக்கும்
துப்புர வொழிந்தோர்உள்ளகத் தோங்கும் சோரியே ஒற்றியூர்த் துணையே

863
துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும்என் தன்னை
இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச் செயல் நின்அருள் இயல்பே
அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே

864
பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல்
இரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன்
எரிந்திட எயில்முன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே
விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே

865
வாழ்வது நின்றன் அடியரோ டன்றி மற்றும்ஓர் வெற்றருள் வாழேன்
தாழ்வது நினது தாட்கலான் மற்றைத் தாட்கெலாம் சரண்எனத் தாழேன்
சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை
ஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே