866
ஐயனே மாலும் அயனும்நின் றறியா அப்பனே ஒற்றியூர் அரசே
மெய்யனே நினது திருவருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப்
பொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப் பொன் அருள் செயாதிருப் பாயோ
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்தருள் செய்வதுன் கடனே

867
செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலகவாழ்க்கையில் வரும்பொலா அணங்கே

திருச்சிற்றம்பலம்

 நாள் அவத்து அலைசல் 
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

868
இன்றிருந் தவரை நாளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
என்றிருந் தவத்தோர் அரற்றகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே

869
தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அடையாப்
பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் பதைபதைத் துருகுகின் றனன்காண்
கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வகை அறியேன்
வாவிஏர் பெறப்பூஞ் சோலைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே

870
நீரின்மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பிப்
பாரின்மேல் அலையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
காரின்மேல் வரல்போல் கடாமிசை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
வாரின்மேல் வளரும் திருமுலை மலையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே