871
கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கனமிருந் ததுதான்
வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்
பெருங்கணம் சூழ வடவளத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்
மருங்கன வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே

872
கன்னியர் அளகக் காட்டிடை உழன்ற கல்மனக் குரங்கினேன் தனைநீ
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங் கார்சொல வல்லவர் ஐயா
என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள் என்செய்வேன் என்செய்வேன் அந்தோ
மன்னிய வன்னி மலர்ச்சடை மருந்தே வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே

873
பசிக்குண வுழன்றுன் பாததா மரையைப் பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல்
நசிக்கும்இவ்வுடலை நம்பினேன் என்னை நமன்தமர் வருத்தில்என் செய்கேன்
விசிக்கும்நல் அரவக்கச்சினோய் நினது மெய்அருள் அலதொன்றும் விரும்பேன்
வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செயஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே

874
கான்றசோ றருந்தும் கணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்தையே விரும்பும்
நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன்
சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா
மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே

875
மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே மைவடித் தெடுக்குநர் போல
நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே