876
அங்கையில் புண்போல் உலகவாழ் வனைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
பங்கமுற் றலைவ தன்றிநின் கமல பாதத்தைப் பற்றிலேன் அந்தோ
இங்கெனை நிகரும் ஏழையார் எனக்குள் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
மங்கையோர் புடைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே

877
கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் துழைக்கும்
குணத்தினில் கொடியேன தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
பணத்தினில் பொலியும் பாம்பரை ஆர்த்த பரமனே பிரமன்மல் அறியா
வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே

திருச்சிற்றம்பலம்

 நெஞ்சைத் தேற்றல் 
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

878
சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
நன்று வேண்டிய யாவையும் வாங்கி
நல்கு வேன்எனை நம்புதி மிகவே

879
தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
மாது வேண்டிய நடனநா யகனார்
வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே

880
இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்
இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ
கரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல்
கருதி வந்தவர் கடியவர் எனினும்
புரக்கின் றோர்மலர்ப் புரிசடை உடையார்
பூத நாயகர் பொன்மலைச் சிலையார்
உரக்குன் றோர்திரு வொற்றியூர்க் கேகி
உன்னி ஏற்குதும் உறுதிஎன் நெஞ்சே