881
கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
கருதி வேண்டிய தியாதது கேண்மோ
சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே

882
இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
கொடுப்பவர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே

883
மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே

884
மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்
வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்
இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்
யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்
பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே
வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து
வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே

885
காலம் செல்கின்ற தறிந்திலை போலும்
காலன் வந்திடில் காரியம் இலைகாண்
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்
நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்
ஏலம் செல்கின்ற சூழலிஓர் புடையார்
இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்
நல்கு வார்அவை நல்குவன் உனக்கே