886
சென்று நீபுகும் வழியெலாம் உன்னைத்
தேட என்வசம் அல்லஎன் நெஞ்சே
இன்ற ரைக்கணம் எங்கும்நேர்ந் தோடா
தியல்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
அன்று வானவர் உயிர்பெற நஞ்சம்
அருந்தி நின்றஎம் அண்ணலார் இடத்தே
நின்று வேண்டிய யாவையும் உனக்கு
நிகழ வாங்கிநான் ஈகுவன் அன்றே

887
கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனைநீ
அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே

திருச்சிற்றம்பலம்
 ஈண்டு மேற்கொண்ட குறட்பா
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு  ( ன இரவு ன )

 நெஞ்சறை கூவல் 
திருவொற்றியூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

888
கண்கள் முன்றினார் கறைமணி மிடற்றார்
கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில்
பாத நீடிய பங்கயப் பதத்தார்
ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே

889
கரிய மாலன்று கரியமா வாகிக்
கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
உம்பர் நாயகர் தம்புயம் புனைய
வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே

890
திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
மருவின் நின்றநன் மணங்கொளம் மலர்ப்பூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே