891
கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
துரும்பை நாட்டிஓர் வஞ்சையன் போலத்
தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோ ன்
தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே

892
வதன நான்குடை மலரவன் சிரத்தை
வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்
நிதன நெஞ்கர்க் கருள்தரும் கருணா
நிதிய மாகிய நின்மலப் பெருமான்
சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்
தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு
மதன இன்தமிழ் மாலையோ டணுபூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே

893
கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
காலில் போந்துமுன் காணரு முடியார்
அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
அம்மை காணநின் றாடிய பதத்தார்
செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
மறாது நீஉடன் வருதிஎன் மனனே

894
சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
பூத நாதர்நற் பூரணா னந்தர்
தாமும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே

895
விதியும் மாலுமுன் வேறுரு வெடுத்து
மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
பணைகொன் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே