901
நாதனைப் பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனைச் சாம
கீதனை ஒற்றிக் கிறைவனை எங்கள் கேள்வனைக் கிளர்ந்துநின் றேத்தாத்
தீதரை நரகச் செக்கரை வஞ்சத் திருட்டரை மருட்டரைத் தொலையாக்
கோதரைக் கொலைசெய் கோட்டரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே

902
நம்பனை அழியா எங்கள் நாதனை நீதனைக் கச்சிக்
கம்பனை ஒற்றிக் கங்கைவே ணியனைக் கருத்தனைக் கருதிநின் றேத்தா
வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக்
கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே

903
சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றைத் தாரணைச் சராசர சடத்துள்
உடையனை ஒற்றி ஊரனை முவர் உச்சனை உள்கிநின் றேத்தாக்
கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக
நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே

904
கஞ்சனைச் சிரங்கொய் கரத்தனை முன்று கண்ணனைக் கண்ணனைக் காத்த
தஞ்சனை ஒற்றித் தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்துநின் றேத்தா
வஞ்சரைக் கடைய மடையரைக் காம மனத்தரைச் சினத்தரை வலிய
நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே

905
தாமனை மழுமான் தரித்தசெங் கரனைத் தகையனைச் சங்கரன் தன்னைச்
சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்துநின் றேத்தா
ஊமரைநீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்
நாமரை நரக நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே