906
ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத்
தேசனைத் தலைமை தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்துநின் றேத்தா
நீசரை நாண்இல் நெட்டரை நாரக நேயரைத் தீயரைத் தரும
நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே

907
நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே

திருச்சிற்றம்பலம்

 அடிமைத் திறத் தலைசல் 
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

908
தேவர் அறியார் மால்அறியான் திசைமா முகத்தோன் தான்அறியான்
யாவர் அறியார் திருஒற்றி அப்பா அடியேன் யாதறிவேன்
முலர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம் பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நறுத்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே

909
புகழே விரும்பிப் புலன்இழந்தேன் போந்துன் பதத்தைப் போற்றுகிலேன்
இகழேன் எனைநான் ஒற்றிஅப்பா என்னை மதித்தேன் இருள்மனத்தேன்
திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர் சிறியர் அறியேன் தீவினையை
அகழேன்எனினும் எனையாளா தகற்றல் அருளுக் கழகன்றே

910
அன்றும் அறியார் மாதவரும் அயனும் மாலும் நின்நிலையை
இன்றும் அறியார் அன்றியவர் என்றும் அறியார் என்னில்ஒரு
நன்றும் அறியேன் நாயடியேன் நான்எப்படிதான் அறிவேனோ
ஒன்றும் நெறிஏ தொற்றிஅப்பா ஒப்பார் இல்லா உத்தமனே