911
ஒப்பார் இல்லா ஒற்றிஅப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
வெப்பார் குழியில் கண்முடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுவித்தேனே

912
விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
அடுத்தேன் ஒற்றி அப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ

913
படுவேன் அல்லேன் நமன்தமரால் பரிவேன் அல்லேன் பரமநினை
விடுவேன் அல்லேன் என்னையும்நீ விடுவாய் அல்லை இனிச்சிறிதும்
கெடுவேன் அல்லேன் சிறியார்சொல் கேட்பேன் அல்லேன் தருமநெறி
அடுவேன் அல்லேன் திருஒற்றி அப்பா உன்றன் அருள்உண்டே

914
உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய
திண்டோ ள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன் சேர்ந்தேத்தேன்
எண்தோள் உடையாய் என்றிரங்கேன் இறையும் திரும்பேன் இவ்வறிவைக்
கொண்டே உனைநான் கூடுவன்நின் குறிப்பே தொன்றும் அறியேனே

915
அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி அப்பாநான்
சிறியேன் எனினும் நினைஅன்றித் தெறியேன் மற்றோர் தேவர்தமை
வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய் வேன்அடியேன்
நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே