916
கடனே அடியர் தமைக்காத்தல் என்றால் கடையேன் அடியன்அன்றோ
உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன் உள்ளத் துயரும் தவிர்த்திலையே
விடன்நேர் கண்டத் தின்னமுதே வேத முடியில் விளங்கொளியே
அடன்ஏர் விடையாய் திருஒற்றி அப்பா உனைநான் அயர்ந்திலனே

917
இலனே மற்றோர் துனைசிறிதும் என்னே காமம் எனும்கடலில்
மலனேன் வருந்தக் கண்டிருத்தல் மணியே அருளின் மரபன்றே
அலனே அயலான் அடியேன்நான் ஐயாஒற்றி அப்பாநல்
நலனேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன்

918
நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே

திருச்சிற்றம்பலம்

 ஆனந்தப் பதிகம்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

919
குடிகொள் மலஞ்சூழ் நலவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே

920
சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
ஈதல் இரக்கம் என்அளவும் இல்லா தலையும் என்றனைநீ
ஓதல் அறிவித் துணர்வறிவித் தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக்
காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே