921
அற்ப அளவும் நிச்சயிக்கல் ஆகா உடம்மை அருமைசெய்து
நிற்ப தலதுன் பொன்அடியை நினையாக் கொடிய நீலன்எனைச்
சற்ப அணியாய் நின்றன்ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின்புகழைக்
கற்ப அருள்செய் தனைஅதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே

922
உண்டு வறிய ஒதிபோல உடம்மை வளர்த்தூன் ஊதியமே
கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொயன்எனை
விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக்
கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே

923
நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே

924
குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோ ன் வழியில் சென்றிடவா
யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய
வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே

925
பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்
கோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
தேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே