926
பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன்இழந்தே
துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன்எனை
உற்றற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
கற்றப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே

927
கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் பொல்லாக் கூரைதனை
நாட்டும் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை
ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன் ஒற்றி யூர்வந் துறநினைவு
காட்டுங் கருணை செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே

928
ஊணத் துயர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன்எனை
மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர்
காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே

929
புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் மைம்மா றறியேன் கடையேனே

திருச்சிற்றம்பலம்

 அவல மதிக்கு அலைசல் 
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

930
மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே