931
தக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்
துக்கம் அதனைச் சுகம்என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
மிக்க அடியார் நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே
செக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே

932
கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை
விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய
பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்
துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே

933
துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்
பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே

934
வலமே உடையார் நின்கருனை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும்உவர்ச்
சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ

935
நாளை வருவ தறியேன்நான் தஞ்சம் அனைய நங்கையர்தம்
ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே