936
முத்தி முதலே முக்கணுடை முரிக் கரும்பே நின்பதத்தில்
பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே

937
மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே

938
என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்பம் எனவே எனக்கவர்நோய்
தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக் கிவண்நிற் கின்றேனே

939
எற்றுக் கடியர் நின்றதுநின் இணைத்தாள் மலரை ஏத்தஅன்றோ
மற்றிக் கொடியேன் அஃதின்றி மடவார் இடைவாய் மணிப்பாம்பின்
புற்றுக் குழன்றேன் என்னேஎன் புந்தி எவர்க்குப் புகல்வேனே
கற்றுத் தெளிந்தோர் புகழ்ஒற்றிக் கண்ணார்ந் தோங்கும் கற்பகமே

940
ஓங்கும் பொருளே திருஒற்றி யூர்வாழ் அரசே உனைத்துதியேன்
தீங்கும் புழுவும் சிலைநீரும் சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத்
தூங்கும் மடவார் புலைநாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன்
வாங்கும் பவம்தீர்த் தருள்வதுநின் கடன்காண் இந்த மண்ணிடத்தே

 எழுசீர் தொவே , அறுசீர் சமுக ஆபா 

 ஆனா வாழ்வின் அலைசல் 
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்