941
துள்ளிவாய் மடுக்கும் காணையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள் நகர் உகுப்பார்
அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே

942
ஒற்றியூர் அமரும் ஓளிகெழு மணியே உன்அடி உன்கிநின் றேத்தேன்
முற்றியூர் மலினக் குழிஇருள் மடவார் முலைஎனும் மலநிறைக் குவையைச்
சுற்றிஊர் நாயின் சுழன்றனன் வறிதே சுகம்எனச் சூழ்ந்தழி உடலைப்
பற்றியூர் நகைக்கத் திரிதரு கின்றேன் பாவியேன் உய்திறம் அரிதே

943
அரியது நினது திருஅருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம் கூட்டிச்
சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே

944
பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
கருமாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
தருமவா ரிதியே தடப்ணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே

945
அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும் ஐயவோ நான்அதை அறிந்தும்
மருள்வதென் இயற்கை என்செய்வேன் இதனை மனங்கொளா தருள்அரு ளாயேல்
தெருள்வதொன் றின்றி மங்கையர் கொங்கைத் திடர்மலைச் சிகரத்தில் ஏறி
உருள்வதும் அல்குல் படுகுழி விழுந்தங் குலைவதும் அன்றிஒன் றுண்டோ