946
உண்டுநஞ் சமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னைக்
கண்டுநெஞ் சுருகிக் கண்கள்நீர் சோரக் கைகுவித் திணையடி இறைஞ்சேன்
வண்டுநின் றலைக்கும் குழல்பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கிக்
குண்டுநீர் ஞாலத் திடைஅலை கின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே

947
அன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ருரனார் உன்னைச்
சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே

948
இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம்
கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன்
துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால் துணைநினை அன்றிஒன் றறியேன்
தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே

949
இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஒம்பிக்
குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்
பொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி
நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே

950
நெறியிலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும்
பொறியிலேன் பிழையைப் பொறுப்பதுன் கடனே பொறுப்பதும் அன்றிஇவ் வுலக
வெறியிலே இன்னும் மயங்கிடா துன்தன் விரைமலர் அடித்துணை ஏத்தும்
அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள்ளறுத் தவனே

திருச்சிற்றம்பலம்

 அருள் திறந்து அலைசல் 
திருவொற்றியூர்
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்