951
நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
உறைமணக்கும் பூம்பொழில்சூர் ஒற்றிஅப்பா உன்னுடைய
மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ

952
அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றிஅப்பா உன்னுடைய
மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ

953
ஆறடுத்துச் சென்றஎங்கள் அப்பருக்கா அன்றுகட்டுச்
சோறெடுத்துச் சென்ற துணையே சுயஞ்சுடரே
ஊறெடுத்தோர் காணரிய ஒற்றிஅப்பா உன்னுடைய
நீறடுத்த எண்தோள் நிலைமைதனைப் பாரேனோ

954
சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
உய்வைத்த உத்தமனே ஒற்றிஅப்பா உன்னுடைய
தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ

955
பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ