956
பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
ஊணாக உள்ளுவந்த ஒற்றிஅப்பா மால்அயனும்
காணாத நின்உருவைக் கண்டு களியனோ

957
கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிறம்
உள்ளுவார் உள்உறையும் ஒற்றிஅப்பா உன்னுடைய
தௌ;ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ

958
செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றிஅப்பா உன்வடிவம்
இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ

959
மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றிஅப்பா என்னுடைய
வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ

960
குற்றம் செயினும் குணமாக் கொண்டருளும்
நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றிஅப்பா என்கருத்து
முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ