961
வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ

962
இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
உன்னல்உறும் தௌ;ளமுதே ஒற்றிஅப்பா என்வாய்உன்
தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ

963
பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
ஒண்மணியே தேனேஎன் றொற்றிஅப்பா உன்தனைநான்
பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ

964
மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ

965
கல்லார்க் கிதங்கூறிக் கற்பழிந்து நில்லாமல்
எல்லார்க்கும் நல்லவனே என்அரசே நல்தருமம்
ஒல்லார் புரமெரித்த ஒற்றிஅப்பா உன்அடிக்கே
சொல்லாமல் மலர்தொடுத்துச் சூழ்ந்தணிந்து வாழேனோ