966
கற்பவற்றைக் கல்லார்க் கடையரிடம் சென்றவர்முன்
அற்பஅற்றைக் கூலிக் கலையும் அலைப்பொழிய
உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய
நற்பதத்தை ஏத்திஅருள் நல்நலந்தான் நண்ணேனோ

967
தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
உந்தைஎன்போர் இல்லாத ஒற்றிஅப்பா உன்அடிக்கீழ்
முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ

968
பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்றும் பேசாத
வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலோனேன்
உய்என் றருள்ஈயும் ஒற்றிஅப்பா உன்னுடைய
மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ

969
தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றிஅப்பா நின்அடிக்கீழ்
நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ

970
வாதுபுரிந் தீன மடவார் மதித்திடுவான்
போதுநிதம் போக்கிப் புலம்பும் புலைநாயேன்
ஓதுமறை யோர்குலவும் ஒற்றிஅப்பா ஊரனுக்காத்
தூதுசென்ற நின்தாள் துணைப்புகழைப் பாடேனோ