971
பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
உன்னாசை கொண்டேஎன் ஒற்றிஅப்பா நான்மகிழ்ந்துன்
மின்னாரும் பொன்மேனி வெண்ணீற்றைப் பாரேனோ

972
கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
தூள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
உள்உண்ட தௌ;அமுதே ஒற்கஅப்பா உன்தனைநான்
வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ

973
பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
ஓராதார்க் கெட்டாத ஒற்றிஅப்பா உன்னுடைய
நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ

974
வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றிஅப்பா உன்னுடைய
வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ

975
புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடிவில் கொள்ளேனோ