976
நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக்
கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான்
ஒன்றுமனத் துள்ஒறியே ஒற்றியப்பா உன்னுடைய
வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ

977
மண்கிடந்த வாழ்வின் மதிமயக்கும் மங்கையரால்
புண்கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம்அற
ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றிஅப்பா நாரணன்தன்
கண்கிடந்த சேவடியின் காட்சிதனைக் காணேனோ

978
கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றிஅப்பா நீஉலகை
ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ

979
மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ

980
சீலம்அற நிற்கும் சிறியார் உறவிடைநல்
காலம்அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்தம்
ஒலம்அற நஞ்சருந்தும் ஒற்றியப்பா உன்னுடைய
நீல மணிமிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ