981
சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும்
யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன்
ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றிஅப்பா உன்இதழித்
தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ

982
ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த
நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி
ஓதவள மிக்கஎழில் ஒற்றிஅப்பா மண்ணிடந்தும்
மாதவன்முன் கானா மலர்அடிக்கண் வைகேனோ

983
கல்லைப் புறங்கண்ட காய்மனத்துக் கைதவனேன்
தொல்லைப் பழவினையின் தோய்வகன்று வாய்ந்திடவே
ஒல்லைத் திருவருள்கொண் டொற்றியப்பா உன்னுடைய
தில்லைப் பொதுவின் திருநடனம் காணேனோ

984
கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச
நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணைஇன் துன்பொழிய
உடையவனே உலகேத்தும் ஒற்றிஅப்பா நின்பால்வந்
தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ

985
வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில்
பேதை எனவீழ்ந்தே பிணிஉழத்தே பேயடியேன்
ஓதை கடற்கரைவாய் ஒற்றிஅப்பா வாழ்த்துகின்றோர்
தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ