986
பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
வெய்யற் கிரிமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
உய்யற் கருள்செய்யும் ஒற்றிஅப்பா உன்அடிசேர்
மெய்யர்க் கடமைசெய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ

திருச்சிற்றம்பலம்

 நற்றுணை விளக்கம் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

987
எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
இடர்கொண் டோ ய்ந்தனை என்னினும் இனிநீ
அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே

988
காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
கணைகன் ஏவினும் காலனே வரினும்
பூவின் மன்னவன் சீறினும் திருமால்
போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
ஒன்றும் அஞ்சல்நீ உளவறித் திலையோ
நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே

989
நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான் 
கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
கொடிய காமனைக் கொளுவிய நுதல்நீ
நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே

990
எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்
செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
சென்று சோறிரந் தனித்தருள் செய்தோன்
நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே