1001
நல்ல நீறிடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல ரும்பரி மளந்தரும் முக்கே
சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே

1002
அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துன்க
இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே

1003
முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
பத்தி நீறிடும் பத்தர்க்ள் காலால்
பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
போற்ற லார்புரம் பொடிபடி நகைத்தோன்
சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே

1004
இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க்
கௌ;ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
இனிய நீறிடும் சிவனடி யவர்கள்
எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக
இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள்
ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன்
இடங்கொண் டெம்முளே இசைகுநற் பொருட்டே

1005
நாட நீறிடா முடர்கள் கிடக்கும்
நரக இல்லிடை நடப்பதை ஒழிக
ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
உலவும் வீட்டிடை ஒடியும் நடக்க
கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே