1006
நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே
1007
வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி 

மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப் 
பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப் 

பாவ மேஅலால் பலன்சிறி துளதோ 
ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா 

இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி 
ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே    
1008
கொடிய மாதர்கள் இடையுறும் நரகக் 

குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக் 
கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம் 

கண்ட பாவியே காமவேட் டுவனே 
இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன் 

இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய் 
ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே    
1009
பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த 

பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி 
வாதை உற்றிட வைத்தனை ஐயோ 

மதியில் காமமாம் வஞ்சக முறியா 
ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால் 

எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில் 
ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே    
1010
கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக் 

கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற 
பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல் 

பரிவி லாமலே பயன்இழந் தனன்காண் 
சாவ நீயில தேல்எனை விடுக 

சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம் 
ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே