1011
சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா 

தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள் 
ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் 

இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய் 
சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய் 

சுகமி லாதநீ தூரநில் இன்றேல் 
ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே    
1012
மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய் 

முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில் 
போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும் 

போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம் 
சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச் 

சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில் 
ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே    
1013
மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ 

வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா 
சிதமெ னும்பரன் செயலினை அறியாய் 

தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் 
இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார் 

யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க் 
குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே   
1014
அமைவ றிந்திடா ஆணவப் பயலே 

அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண் 
எமைந டத்துவோன் ஈதுண ராமல் 

இன்று நாம்பரன் இணையடி தொழுதோம் 
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் 

கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல் 
உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே    
1015
கருமை யாம்அகங் காரமர்க் கடவா 

கடைய னேஉனைக் கலந்தத னாலே 
அருமை யாகநாம் பாடினோம் கல்வி 

அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம் 
இருமை இன்பமும் பெற்றனம் என்றே 

எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண் 
ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே