1021
உள்ளி யோஎன அலறிநின் றேத்தி 

உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும் 
வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன் 

மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன் 
வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க 

விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய் 
தௌ;ளி யோர்புகழ்ந் தரகர என்னத் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே    
1022
விருப்பி லேன்திரு மால்அயன் பதவி 

வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன் 
மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார் 

மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன் 
ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன் 

உள்ளம் எப்படி அப்படி அறியேன் 
திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே    
1023
நிலையி லாஉல கியல்படும் மனத்தை 

நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன் 
விலையி லாமணி யேஉனை வாழ்த்தி 
வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன் 
அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன் 

அற்ப னேன்திரு அருளடை வேனே 
சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே    
1024
காயம் என்பதா காயம்என் றறியேன் 

கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன் 
சேய நன்னெறி அணித்தெனக் காட்டும் 

தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன் 
தூய நின்அடி யவருடன் கூடித் 

தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன் 
தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே    
1025
புன்னு னிப்படும் துளியினும் சிறிய 

போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன் 
என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன் 

என்செய் கேன்எனை என்செயப் புகுகேன் 
மின்னி னில்பொலி வேணியம் பெருமான் 

வேற லேன்எனை விரும்பல்உன் கடனே 
தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே