1031
உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் 

உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள் 
இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய் 

எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன் 
அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன் 

அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர் 
புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ    
1032
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் 

கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார் 
அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும் 

ஐய நீர்உம தருள்எனக் களிக்க 
இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும் 

ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ 
பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ    
1033
விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ் 

விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால் 
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் 

கடமை நீங்குறார் உடமையின் றேனும் 
நெருப்பு நும்உரு ஆயினும் அருகில் 

நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் 
பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ    
1034
கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக் 

கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ 
அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம் 

ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன் 
நெடிய மால்அயன் காண்கில ரேனும் 

நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன் 
பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ    
1035
வினையி னால்உடல் எடுத்தன னேனும் 

மேலை நாள்உமை விரும்பிய அடியேன் 
எனைஇன் னான்என அறிந்திலி ரோநீர் 

எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர் 
மனையி னால்வரும் துயர்கெட உமது 

மரபு வேண்டியே வந்துநிற் கின்றேன் 
புனையி னால்அமர்ந் தீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ