1051
குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் 

கும்பியை ஓம்பினன் அல்லால் 
செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் 

செப்புதல் மறந்தனன் அதனால் 
விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே 

மென்கரும் பீன்றவெண் முத்தம் 
தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே    
1052
கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் 

கடன்கழித் திட்டனன் அல்லால் 
அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த 

ஐயனே நினைத்தொழல் மறந்தேன் 
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் 

சங்கர சிவசிவ என்றே 
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே    
1053
அருமருந் தனையாய் நின்திரு முன்போந் 

தரகர எனத்தொழல் மறந்தே 
இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த 

இயல்புற உண்டனன் அதனால் 
கருமருந் தனைய அஞ்செழுத் தோதும் 

கருத்தர்போல் திருத்தம தாகத் 
தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே   
1054
கண்நுதல் கரும்பே நின்முனம் நீல 

கண்டம்என் றோதுதல் மறந்தே 
உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் 

உன்முனம் நின்றனன் அதனால் 
நண்ணுதல் பொருட்டோ ர் நான்முகன் மாயோன் 

நாடிட அடியர்தம்உள்ளத் 
தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே    
1055
கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல 

கண்டம்என் றுன்திரு முன்னர் 
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் 

துருத்தியில் அடைத்தனன் அதனால் 
செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா 

தேவஓம் அரகர எனும்சொல் 
சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே